உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சர்வே எண், பெயர் உள்ளிட்டவற்றில்... குளறுபடி:40,000க்கும் மேற்பட்டோர் அலைக்கழிப்பு

சர்வே எண், பெயர் உள்ளிட்டவற்றில்... குளறுபடி:40,000க்கும் மேற்பட்டோர் அலைக்கழிப்பு

திருவாலங்காடு:ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட வீட்டு வரி ரசீதில் பெயர் உள்ளிட்டவற்றில் உள்ள குளறுபடியால், திருவள்ளூர் மாவட்டத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். விபரங்கள் அவசரகதியில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், முகாம் நடத்தி தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, மீஞ்சூர் உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.

நடவடிக்கை

இந்த ஊராட்சிகளில் குடிநீர் வழங்கல், துாய்மை பராமரிப்பு, சாலை, தெருவிளக்கு அமைப்பு உள்ளிட்டவற்றை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, மத்திய -- மாநில அரசுகள் நிதி அளிக்கின்றன. இது ஒருபுறமிருக்க, ஊராட்சி நிர்வாகத்தின் வருவாய் ஆதாரத்திற்காக, வீடு, குடிநீர், தொழில் வரி ஆகியவை விதிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீட்டு வரி உள்ளிட்ட வற்றை வசூலித்தால், ஊராட்சி நிர்வாகம் பதிவேட்டில் பதிவு செய்து, கட்டணம் செலுத்திய ரசீது வழங்கப்படும். கடந்த, 2022 ஆகஸ்ட் முதல், இணையவழி செயல்பாடு மேம்பட்டதால், ஊராட்சி பகுதிகளில் வீட்டு வரி, ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என, அரசு அறிவித்தது. மூன்று மாதங்களில் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. முதலில் வீட்டு வரி, அடுத்து பிற வரிகளை இணையவழியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், வரி செலுத்துவோரின் பெயர், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிவு செய்யப்பட்டது.

அதிருப்தி

இதே வகையில், தந்தை அல்லது கணவர் பெயர், ஆதார் எண், மனை, சர்வே, பட்டா எண்கள், கிராம பெயர், கட்டட பரப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, ஊரக வளர்ச்சித்துறை இணையத்தில் பதிவேற்றியது . வரி செலுத்துவோருக்கு, கணினி ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதிவு செய்யப் படும் பெயர்கள், கணினியில் அவசரகதியில் பதியப்பட்டதால், பெயர் உள்ளிட்டவை மாறியுள்ளதாவும், இதனால், மாவட்டம் முழுவதிலும், 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

புரோக்கர் வாயிலாக வசூல் வேட்டை

திருவள்ளூர் வீரராகவபுரத்தை சேர்ந்த செங்கல்வராயன் என்பவர் கூறியதாவது: வீட்டு வரி என் தந்தை பெயரில் இருப்பதால், நான் சென்று கேட்கும் போது, 'பட்டாவை உங்கள் பெயரில் மாற்றி வாருங்கள்' என, அலைக்கழிக்கின்றனர். கிராம நத்தம், கலத்து மேட்டு புறம்போக்கு, ஆட்சேபனையற்ற புறம்போக்கு உள்ளிட்ட நிலங்களில் வசிப்போர் பட்டா இல்லததால், வீட்டு வரி ரசீது பெற முடியாமல் தவிக்கின்றனர். பெரும்பாலான கிராமங்களில் வீட்டு வரி, தந்தை அல்லது மூதாதையர் பெயரில் உள்ளதால், அதை மாற்ற ஊராட்சி செயலரை தொடர்பு கொள்கின்றனர். வரியில் பெயர் மாற்றும் அதிகாரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உள்ளதால், பி.டி.ஓ., அலுவலகத்திற்கு அலைய வேண்டியுள்ளது. அங்கு, அதிகாரிகள் சிலர் புரோக்கர்கள் வாயிலாக வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, ஒன்றியத்தின் முக்கிய கிராமங்களில் முகாம் நடத்துவது மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

சரியான பயிற்சி அளிக்கவில்லை

ஊராட்சி செயலருக்கு சரியான பயிற்சி அளிக்காததால், பயனாளர்களின் பெயர்கள் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெயர் மாற்றம், எழுத்துப்பிழை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை சரிசெய்து அப்ரூவல் தருகின்றனர். முகாம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். - ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை