மனைவியை சரமாரியாக குத்திய சந்தேக கணவர் தற்கொலை
ஆவடி:நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக குத்திய கணவர், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, கரிமேடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 38; வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ஷீலா ராணி, 25. இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ஷீலாராணியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சரண்ராஜ், அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். வழக்கம்போல நேற்று முன்தினம் சண்டை ஏற்படவே, ஷீலா ராணி கோபித்து கொண்டு, குழந்தைகளுடன் அருகில் உள்ள தன் சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை, சரண்ராஜ் அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கத்தியால் ஷீலா ராணியின் கழுத்து, வயிறு, கைகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷீலா ராணி மயங்கமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சரண்ராஜ், போலீசாரின் விசாரணைக்கு பயந்து, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பலத்த காயங்களுடன் கிடந்த ஷீலா ராணியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.