உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆசிரியர்கள் பற்றாக்குறை 30,000 மாணவர்களின் கல்வி பாதிப்பு

ஆசிரியர்கள் பற்றாக்குறை 30,000 மாணவர்களின் கல்வி பாதிப்பு

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 206 தொடக்கம்; 130 நடுநிலை; 46 உயர்நிலை; 35 மேல்நிலை என, 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், 1.17 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இருந்த பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில், 139 பள்ளிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அதில், 39,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.இதற்கிடையே, இணைக்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வந்தால் அவர்கள், ஜூனியர் அடிப்படையில் சேர்க்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வுக்காக காத்திருந்த ஆசிரியர்கள், இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்தனர்.இதனால், இணைக்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றிய பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறை கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு இடமாறுதல் வாங்கி சென்று விட்டனர்.இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஒரு ஆசிரியரே அனைத்து பாடங்களையும் எடுப்பதாகவும், அதனால், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆசிரியர்கள் பற்றாக்குறையால், அப்பள்ளிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, 10,000க்கு கீழ் குறைந்துள்ளது.தற்போது மொத்த மாநகராட்சி பள்ளிகளில் 30,000க்கு கீழ் தான் மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளிகள் இணைக்கப்படும்போது, 'மாநகராட்சி சார்பில், அப்பள்ளிகள் மேம்படுத்தப்படும்' என, மேயர் பிரியா அறிவித்தார். ஆனால், இதுவரை பெரியளவில் செயல்படுத்தப்படவில்லை என, பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.மேலும், கவுன்சிலர்கள் பலர், தங்கள் வார்டுகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக, மேயரிடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் அதிப்தியில் உள்ளனர்.மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:இணைக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறைக்கு சென்றதால், பற்றாக்குறை இருப்பது உண்மை தான்.ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு, மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் அங்கு நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.மேலும், தன்னார்வ அமைப்புகள் வாயிலாகவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை