ஓட்டுனருக்கு நெஞ்சு வலி பஸ் பயணியர் தப்பினர்
காஞ்சிபுரம்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 47; மாநகர பஸ் டிரைவர். இவர் நேற்று, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, பூந்தமல்லிக்கு நோக்கி வழித்தடம் எண்:578 பேருந்தில், 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிச் சென்றார்.பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே சென்றபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சு வலி ஏற்படுவதை உணர்ந்த ஸ்ரீதர், லாவகமாக பேருந்தினை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, மயங்கினார். பயணியர் சிலர் அவரை மீட்டு, அவசர ஆம்புலன்ஸ் வாயிலாக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்குள்ள டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழக்கும் தருவாயிலும், தன்னை நம்பி வந்த பயணியரின் உயிரை காப்பாற்றிய டிரைவர் ஸ்ரீதரின் செயல், பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.