திருத்தணி கோவிலில் சேவை டிக்கெட் ஆன்-லைனில் செலுத்தும் வசதி அவசியம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள், மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சந்தன காப்பு, உற்சவருக்கு திருக்கல்யாணம், தங்கதேர், வெள்ளித்தேர், வெள்ளிமயில் வாகனம், கேடய உற்சவம், தங்கம் மற்றும் வெள்ளி உற்சவம் மற்றும் சகஸ்கரநாம அர்ச்சனை போன்ற சேவை செய்வதற்கு வேண்டிக் கொள்கின்றனர்.இந்த சேவைகளுக்கு, குறைந்த பட்சம், 750 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 10,000 ரூபாய் வரை ஒவ்வொரு சேவைக்கு நிர்ணயித்த கட்டணம் பக்தர்கள் மலைக்கோவில் அலுவலகத்தில் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.இந்த சேவைகளுக்கு தினமும் பக்தர்கள் பணம் செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் பணமாக கொடுத்தால் தான் மேற்கண்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்கின்றனர். ஆன்-லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு வசதியில்லாததால் பல பக்தர்கள் முன்பதிவு செய்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.மலைக்கோவிலில் எந்த வங்கி ஏ.டி.எம்., மையமும் இல்லாததால் ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகம், சேவை கட்டணம் செலுத்துவதற்கு வசதிய ஆன்-லைன் பணபரிவர்த்தனை கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.