தி.மு.க., கவுன்சிலரை அடிக்க பாய்ந்த பேரூராட்சி தலைவியின் கணவர் செங்குன்றத்தில் சலசலப்பு
செங்குன்றம்:செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த கு.தமிழரசி என்பவர் உள்ளார். இவரது கணவர் குமார். பேரூராட்சி மன்றக்கூட்டம், பணிகள் ஒப்பந்த கூட்டங்களில், இவரது தலையீடு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாவிடம், கவுன்சிலர்கள் பலமுறை புகார் செய்தும், அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, 4வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் கோட்டீஸ்வரன், 'தன் வார்டில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்க உள்ள, சாலைப்பணியை முறையாக செய்ய வேண்டும், பெயரளவில் சாலை அமைக்கக்கூடாது' என, ஒப்பந்ததாரரிடம் கூறியிருக்கிறார்.இப்பிரச்னை குறித்து பேச, நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தமிழரசி, செயல் அலுவலர் யமுனா ஆகியோரை, நேரில் சந்திக்க சென்றார்.அப்போது, தலைவர் தமிழரசி அறையில் அவரது கணவர் குமாரும் இருந்துள்ளார். இதை கவன்சிலர் கார்த்திக் கோட்டீஸ்வரன் தன் மொபைல் போனில் பதிவு செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த குமார், கவுன்சிலரை அடிக்க பாய்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்த வீடியோ, வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.