குடிநீர் தொட்டியை சுற்றி குப்பை நோய் அபாயத்தில் உளுந்தை மக்கள்
உளுந்தை, கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளது உளுந்தை ஊராட்சி. இங்குள்ள முத்திரிபாளையம் பகுதியினர் பயன்பாட்டிற்காக, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2012 - 13ம் ஆண்டு ஊரக வளர்ச்சி கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின்கீழ், 42,100 ரூபாய் மதிப்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், 11 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த குடிநீரை பயன்படுத்தும் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் வெளியேறும் குழாய் பகுதியில் உள்ள வால்வு பகுதியில் பழுது ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டி வால்வை சீரமைக்கவும், குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உளுந்தை முத்திரிபாளையம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.