இருண்டு கிடக்கும் பழவேற்காடு பாலம் மொபைல் டார்ச்சில் செல்லும் அவலம் இரவு நேரத்தில் செல்லும் பெண்கள் அச்சம்
பழவேற்காடு:பழவேற்காடு - லைட்அவுஸ்குப்பம் இடையே, ஏரியின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி செயலிழந்து கிடக்கின்றன.கம்பங்களும் துருப்பிடித்து ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழந்து கிடக்கின்றன. மின்விளக்குகள் இல்லாமல், பாலம் இருண்டு கிடக்கிறது. கடலோர பகுதியில் உள்ள 15 மீனவ கிராமத்தினர் இந்த பாலத்தின் வழியாகவே கல்வி, மருத்துவம், வியாபாரம் என, பல்வேறு தேவைகளுக்கு, பழவேற்காடு பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.அன்றாட வீட்டு தேவைகளுக்காக பொருட்களை வாங்க, பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்று வரும் பெண்கள், இருண்டு கிடக்கும் பாலத்தின் வழியாக அச்சத்துடன் பயணிக்கின்றனர். எதிரில் வருவோர் மோதிவிடாமல் இருக்க, சிலர் மொபைலில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் பாலத்தை கடக்கின்றனர்.இந்த பாலம் பழவேற்காடு மற்றும் லைட்அவுஸ்குப்பம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைக்கிறது. இரு நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை.பாலத்தில் விளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை என மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மீனவ மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கையாக பழவேற்காடு பாலத்தின் இருபுறமும் புதிய கம்பங்களுடன் மின்விளக்குகள் பொருத்தி, உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.