ஷட்டரை வெட்டி எடுத்து டாஸ்மாக் கடையில் திருட்டு
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, நேமளூர் கிராமத்தில், டாஸ்மாக் கடை எண்:8,743 இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, முகத்தை மறைத்தபடி கையுறை அணிந்து, பேட்டரியால் இயங்கக்கூடிய கட்டிங் மிஷினுடன் மர்ம நபர் ஒருவர் வந்தார்.டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகளை கட்டிங் மிஷினால் துண்டித்த அவரால், ஷட்டர் நடுவே உள்ள லாக்கை உடைக்க முடியாமல் போனது. அவர் எடுத்து வந்த கட்டிங் மிஷின் கொண்டு, ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கு ஷட்டரை வெட்டி எடுத்துள்ளார்.பின், ஷட்டருக்கு அடுத்து இருந்த கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கிருந்து காலி மதுபான பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம், 11,750 ரூபாயை திருடி சென்றார்.கடையில் இருந்த மதுபானங்கள் திருடு போனதா என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.கட்டிங் மிஷின் கொண்டு டாஸ்மாக் கடையில் நடத்தப்பட்ட இந்த திருட்டு குறித்து, வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், மதுக்கடையின் கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.