பள்ளி எதிரே விபத்து அபாயம்; பாலம் விரிவாக்கம் எப்போது?
பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில், கோனேட்டம்பேட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரே, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் நீர்வரத்து கால்வாய் குறுக்கிடுகிறது. இதற்காக சிறுபாலமும் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், பாலம் விரிவாக்கம் செய்யப்படவில்லை.இதனால், சாலையை ஒட்டி நீர்வரத்து கால்வாய் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பாலத்தின் தடுப்புச்சுவரும் விபத்து ஒன்றில் இடிந்து விட்டது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள், நீர்வரத்து கால்வாயில் கவிழும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.