நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி முன்கூட்டியே செலுவதற்கு ஆர்வமில்லை; ஒரு சதவீதம் வட்டி கட்டுவதற்கு மக்கள் தயார்
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய நகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, திருமழிசை, நாரவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய எட்டு பேரூராட்சிகள் உள்ளன.உள்ளாட்சி நிர்வாகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, பொதுமக்கள் வரி செலுத்துவது அவசியம். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், கடந்தாண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டாலும், அலுவலர்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை வாயிலாக வரிகளை வசூலித்துள்ளனர்.இதன் வாயிலாக, நிலுவையில் இருந்த 90 சதவீத வரிகள் வசூலிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிப்பதின் அவசியத்தை, பல்வேறு வகையில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊக்கத்தொகை
கடந்த 3ம் தேதி முதல் நடப்பாண்டிற்கான சொத்து வரியை, கடந்த மாதம் 30ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது.ஆனால், பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளில், 10 சதவீதம் பேர் கூட சொத்துவரி செலுத்தி, ஊக்கத்தொகையை பெறவில்லை. அதே நேரத்தில், 1 சதவீத வட்டியுடன் சொத்துவரி செலுத்துவதற்கு மக்கள் தயாராக உள்ளனர்.திருத்தணி நகராட்சியில், கடந்த 29ம் தேதி வரை, 13,354 குடியிருப்புகளில், வெறும் 1,320 பேர் மட்டுமே சொத்துவரி கட்டி, ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.இதுகுறித்து திருத்தணி நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:திருத்தணி நகராட்சியில், 13,554 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் குடிநீர், தொழில் வரி, குத்தகை, காலி மனை வரி, அரசு கட்டடங்கள் மற்றும் கட்டட உரிம கட்டணம் என, ஆண்டுக்கு 6.34 கோடி ரூபாய் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.கடந்தாண்டு மொத்த வரியினங்களில், 6 கோடி ரூபாய் வசூலானது. குறிப்பாக, சொத்து வரியில் மட்டும், 98 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.நடப்பாண்டில் முதல் ஆறு மாத சொத்து வரியை, கடந்த 30ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என, நகராட்சியில் பல பகுதிகளில் விளம்பர பேனர்கள், அறிவிப்பு பலகை வைத்தோம்.மேலும், வேன், ஆட்டோ வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆனால், கடந்த 29ம் தேதி வரை, 1,320 பேர் மட்டுமே சொத்து வரி செலுத்தி, ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். இது, 10 சதவீதம்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.