விதை நெல் இருப்பு இல்லை கொள்முதல் செய்ய திட்டம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, விவசாயிகள் விதை நெல் வாங்கி பயிரிட்டு வருகின்றனர். தற்போது, குண்டு ரக விதை நெல் இருப்பு தீர்ந்துவிட்டது. ஏ.டி.டி., 57 ரகம், 250 கிலோ, டி.கே.ஒய்., 13 ரகம் 200 கிலோ மட்டுமே இருப்பு உள்ளது. இதுதவிர, 290 கிலோ கேழ்வரகு விதையும் உள்ளது.குறுகிய காலத்தில் விளையும் குண்டு ரக நெல் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விதைத்த, 80 முதல் 100 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். மகசூலும் லாபகரமாக அமையும் என்பதால், குண்டு ரக நெல் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை வேளாண் உதவி இயக்குனர் தாமோதரன் கூறுகையில், 'தற்போது நவரை பருவ அறுவடை நடந்து வருகிறது. இதில், சொர்ணவாரி பருவத்திற்கான விதை நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது' என்றார்.மேலும், கொள்முதல் செய்யப்படும் விதை நெல், அதிகபட்சமாக ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே இருப்பு வைத்திருக்க முடியும். அதன்பின், அதன் முளைப்பு திறன் குறைந்து விடும் என்பதால், முன்கூட்டியே அதிகளவில் இருப்பு வைப்பது பயன் தராது என்றும் கூறப்படுகிறது.