உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வரத்து கால்வாயில் மின்கம்பங்கள் ஷாக் பயத்தில் திருமழிசை மக்கள் மின்வாரிய அதிகாரிகள் பாராமுகம்

நீர்வரத்து கால்வாயில் மின்கம்பங்கள் ஷாக் பயத்தில் திருமழிசை மக்கள் மின்வாரிய அதிகாரிகள் பாராமுகம்

திருமழிசை: நீர்வரத்து கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளதால், திருமழிசை பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருமழிசை பேரூராட்சிக்குட்பட்டது அன்பு நகர். இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அன்பு நகரில், திருமழிசை ஏரியிலிருந்து கோலப்பன்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. தற்போது இக்கால்வாய் மழைநீர் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறியுள்ளது. இக்கால்வாயில் பல ஆண்டுகளுக்கு முன், 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப் பட்டன. இந்த மின் கம்பங்கள் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து, விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மின்கம்பங்களை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் மூலம் மின்வாரிய அலுவலகத்திற்கு பணம் கட்டியும், மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், நீர்வரத்து கால்வாயில், அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றிய மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அன்புநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி கூறுகையில், 'நீர்வரத்து கால்வாயில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் மின்கம்பங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை