உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் மலைப்பாதை நெரிசலுக்கு...விமோச்சனம்!:ரூ.10.75 கோடியில் மாற்றுப்பாதை பணி துவக்கம்

திருத்தணி கோவில் மலைப்பாதை நெரிசலுக்கு...விமோச்சனம்!:ரூ.10.75 கோடியில் மாற்றுப்பாதை பணி துவக்கம்

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரு வழியே உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு, 10.75 கோடி ரூபாயில் மாற்று தார்ச்சாலை அமைக்கும் பணியை திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் துவங்கியுள்ளனர். ஆறு மாதத்திற்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடப்படும் எனக் கூறியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி -- அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஒரே பாதையில் அனைத்து வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று, அதே வழியில் திரும்பி வர வேண்டிய நிலை உள்ளதால், மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், திருத்தணி -- -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில ஆண்டுகளாக மலைக்கோவிலுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, கிருத்திகை, முக்கிய விழா நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ஒன்றரை கி.மீ., துாரம் கடப்பதற்கு, பல மணி நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மண் சாலை அமைப்பு

கடந்த 2018- -- 19ல், அ.தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் கீழே இறங்குவதற்கு, ஏற்கனவே இருக்கும் மலைப்பாதை அருகே, மாற்று மலைப்பாதை அமைப்பதற்கு உத்தரவிட்டது.பின், அதே ஆண்டு மண் சாலை அமைத்து, 2020ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையினர் மாற்று பாதைக்கு தார்ச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் தார்ச்சாலை அமைக்க, 9.10 கோடி ரூபாய் கோவில் நிதி ஒதுக்கீடு செய்து, ஹிந்து அறநிலை துறை ஆணையரின் நிர்வாக அனுமதிக்காக கோப்பு இருந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் பணி துவக்கம்

கடந்த சில மாதங்களாக வார விடுமுறை நாட்கள் மற்றும் விழா நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதை தவிர்க்கும் வகையில், கிடப்பில் போடப்பட்ட மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து, இதற்காக கோவில் நிதியில் இருந்து, 10.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஹிந்து அறநிலையத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டன.ஆணையர் அனுமதி வழங்கியதால், தற்போது மாற்றுப்பாதை அமைக்கும் பணிகளை, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் துவக்கியுள்ளனர்.

ஆறு மாதத்தில் முடியும்

இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: முருகன் கோவில் நிர்வாகம், வாகனங்கள் மலைக்கோவிலில் கீழே இறங்குவதற்கு, ஏற்கனவே அமைக்கப்பட்ட மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தருமாறு, 10.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, எங்களிடம் பணிகளை ஒப்படைத்துள்ளது.தற்போது பணிகளை துவங்கியுள்ளோம். முதற்கட்டமாக மண்சாலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, சர்வே செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்பின், திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறத்தில் இருந்து, 1.2 கி.மீ., நீளம், 15 மீட்டர் அகலத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்படும்.இதில், பக்தர்கள் நடந்து செல்வதற்கு தனி பாதை மற்றும் வாகனங்கள் செல்ல தனி பாதை அமைக்கப்படும். இப்பணிகள் ஆறு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட திட்டமிட்டுள்ளோம். இந்த மலைப்பாதையில் இரு இடங்களில் மழைநீர் வெளியேறுவதற்கு சிறு பாலங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பக்தர்கள் மகிழ்ச்சி; நெரிசலுக்கு ‛குட்பை'

முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரே வழி மலைப்பாதை உள்ளதால், வாகனங்களில் செல்லும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், போக்குவரத்து நெரிசலால், வாகனங்களை கோவில் நிர்வாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் பின்புறம் நிறுத்திவிடுவதால், அங்கிருந்து பக்தர்கள் ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் மலைக்கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. மாற்று பாதை அமைவதால், நெரிசல் ஏற்படாது. இதனால் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி