பொது கழிப்பறை இல்லாததால் திருவாலங்காடு பெண்கள் அவதி
திருவாலங்காடு:திருவாலங்காடில் இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பறை வசதி இல்லாததால், அப்பகுதி பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்டது திருவாலங்காடு ஊராட்சி. இங்கு, அரசு மேல்நிலைப்பள்ளி, பி.டி.ஓ., அலுவலகம், சர்க்கரை ஆலை, வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ளன. மேலும், 50 கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளதால், தினமும் 60,000க்கும் மேற் பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். கடைகள், வணிக வளாகம், குடியிருப்புகள் என, 5,000க்கும் மேற்பட்டவை உள்ளன. அதேபோல, திருவாலங்காடு தேரடி பகுதியில் இருந்து, அரசு பேருந்து மூலம் பல்வேறு நகரங்களுக்கு பயணியர் செல்கின்றனர். இந்நிலையில், அதிக மக்கள் வரும் தேரடி பகுதியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால், ஆண்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். பெண்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, தேரடி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை அமைக்க முன்வர வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.