உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் வாலிபர் ஒடிசாவில் கொலை வழிப்பறி கும்பலை சேர்ந்த 9 பேர் கைது

திருவள்ளூர் வாலிபர் ஒடிசாவில் கொலை வழிப்பறி கும்பலை சேர்ந்த 9 பேர் கைது

திருவள்ளூர்:கஞ்சா கொள்முதலுக்கு சென்ற திருவள்ளூர் வாலிபர் ஒடிசாவில் கொலையான வழக்கில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேரை, அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி - ஜோதி தம்பதியின் மகன் அஜய், 22. இவர், கடந்த 27ம் தேதி நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். கடந்த 1ம் தேதி இரவு அஜய், தன் பெற்றோரை தொடர்பு கொண்டு, 'ஒடிசாவில் இருக்கிறேன். தன்னை சிலர் பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்' என, தெரிவித்தார்.இதையடுத்து, அவரது பெற்றோர், புல்லரம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். கடந்த 2ம் தேதி புல்லரம்பாக்கம் தனிப்படை போலீசார் ஒடிசாவுக்கு புறப்பட்டனர். பின், 4ம் தேதி ஒடிசா மாநிலம், பாரபுல்லா ரயில் நிலையம் அருகே அஜய் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.இதையறிந்த அஜயின் உறவினர்கள், நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜயின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். தனிப்படை போலீசார் மற்றும் ஒடிசா போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த வழிப்பறி கும்பல், அஜயை கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த ஒடிசா போலீசார், ஒன்பது பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தகவலை, ஒடிசா சென்ற தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வாலிபரின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை