உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மும்பையில் இருந்து போதை மாத்திரை கடத்திய மூவர் கைது

மும்பையில் இருந்து போதை மாத்திரை கடத்திய மூவர் கைது

திருத்தணி:மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்த முயன்ற, 17 வயது சிறுவன் உட்பட மூவரை, போலீசார் நேற்று திருத்தணியில் கைது செய்தனர். மும்பையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி.,யின் தனிப்படை போலீசார், நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் இருந்த, 845 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ஜீவா, 19, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுாரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 22, சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இவர்கள், மும்பையில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தி வந்ததும், சென்னை சென்ட்ரலில் போலீசார் அதிகளவில் சோதனை செய்வர் என்பதால், திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கி, சென்னைக்கு பேருந்து மூலம் செல்ல முயன்றதும் தெரியவந்தது. திருத்தணி போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி