பழிக்கு பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய மூவருக்கு சிறை
திருமழிசை:திருமழிசை பகுதியில், நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில், வெள்ளவேடு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஏழு பேரை விசாரிக்க முயன்றனர்.அதில், நான்கு பேர் தப்பியோடினர். மூன்று பேரை பிடித்து விசாரித்ததில், மூவரும் திருமழிசை உடையார் கோவிலைச் சேர்ந்த லோகேஷ்வரன், 22, ராபர்ட் கிருபாகரன், 25, ஹரிசுதன், 21, என தெரியவந்தது.அதே பகுதியைச் சேர்ந்த எபி என்ற எபினேசன் என்பவர், கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் கொலை செய்யப்பட்டார்.இதற்கு, பழிவாங்கும் விதமாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆறு நாட்டு வெடிகுண்டுகளுடன், திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரை கொலை செய்ய, ஏழு பேரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது என, போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், மூவரையும் கைது செய்து, நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.