திருத்தணி ரெட்டிக்குளம் பாழ் நகராட்சி நிர்வாகம் பாராமுகம்
திருத்தணி, திருத்தணி நகராட்சி பெரிய தெருவிற்கு செல்லும் வழியில் ரெட்டிக்குளம் என அழைக்கப்படும் சண்முகதீர்த்த குளம் உள்ளது. இந்த குளம் அருகே உள்ள மண்டபத்தில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழாவின் போது உற்சவர் முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.இந்த அபிஷேகத்திற்கு ரெட்டிக்குளம் தண்ணீரை, 20 ஆண்டுகளுக்கு முன் வரை பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குளம் மற்றும் சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், அருகே வசிக்கும் சிலர் குப்பையை கொட்டி வருகின்றனர்.இதனால், குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் பெரியதெரு, முருக்கப்ப நகர், ரெட்டிக்குளம் மற்றும் பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக அமையும். மேலும், குடிநீர் பிரச்னையும் வராது.குளத்தில் குப்பை கொட்டுவதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. இதுதொடர்பாக, பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, ரெட்டிக்குளத்தை துார்வாரி சீரமைத்து, குப்பை கொட்டாதவாறு சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.