உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் பூ, பழங்கள் விற்பனை ஜோர்! விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

திருவள்ளூரில் பூ, பழங்கள் விற்பனை ஜோர்! விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு தேவையான பழங்கள், பூக்கள் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற உள்ளன. களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் சாலையோரங்களில் வழக்கம்போல் விற்பனை செய்யப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபடும் விழாக் குழுவினருக்கு, போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 950க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை வராத வகையில், கொண்டாட வேண்டும் என, விழாக் குழுவினருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.மாவட்டத்தில் ஏரி, குளம் என மொத்தம், 15 இடங்களில், விநாயகர் சிலைகளை கரைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. விழா நடைபெறும் இடங்களில், கட்சி சார்பில் பேனர் வைக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.விநாயகருக்கு நிவேதனம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து பழவகைகள் திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை போன்றவை சந்தைக்கு வந்து குவிந்துள்ளது. பூஜைக்கு தேவையான பழ வகைகளான, ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலை உயர்ந்துள்ளது.விநாயகர் பூஜைக்கு தேவையான, விநாயகர் குடை, எருக்கம் பூ மாலை, அருகம்புல், மா இலை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, விலாம்பழம், கம்புகதிர், மக்காச்சோளம், கலாக்காய், மாதுளம், கொய்யா, நாவல், திராட்சை மற்றும் செங்கரும்பு போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.வாழை கன்று ஒரு ஜதை, 60 ரூபாயும், ஒரு ஜோடி கரும்பு, 80-100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இரண்டு கம்பு கதிர், 40 ரூபாய், ஒரு மக்காச்சோளம், 10 ரூபாய், ஆப்பிள் கிலோ 250: சாத்துக்குடி,80; ஆரஞ்சு -250; கொய்யா, 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் வாழைப்பழம் ஒரு டஜன், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதே நேரத்தில் பூக்கள் விலை மட்டும் வழக்கத்திற்கு மாறாக அதிகமான விலை விற்கப்பட்டது. குறிப்பாக, சாமந்தி பூ, ஒரு கிலோ, 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.மேலும், விநாயகர் பூஜைக்கு தேவையான பழம், குடை, எருக்கம்பூ மாலை உள்ளிட்ட ஒரு செட் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும், பக்தர்கள் ஆர்வமாக பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர். இன்று பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும், மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள 15 இடங்களில், 3 மற்றும் 5வது நாட்களில் கரைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ