சாலையோர ஆக்கிரமிப்பால் பஜாரில் போக்குவரத்து நெரிசல்
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல், கும்மிடிப்பூண்டி, பஜார் வீதி வழியாக, கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் வரையிலான, 6.6 கி.மீ., ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ளது.இந்த சாலையில் ஏற்பட்டு வந்த, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 2019ம் ஆண்டு நான்குவழி சாலையாக மாற்றப்பட்டது. அப்போது நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மீண்டும் கட்டடங்களின் ஆக்கிரமிப்பை தவிர்க்கும் நோக்கில், இடிக்கப்பட்ட கட்டடங்களை ஒட்டி கால்வாய் அமைக்கப்பட்டன.கால்வாய் அமைத்ததும், சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், இருந்த இடத்தில் இருந்து பின்நோக்கி கால்வாய் வரை தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்தனர்.கட்டடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகின்றன.இதனால், போக்குவரத்து வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட நான்குவழிச் சாலை திட்டம் பயனற்று போனது. தற்போது பழையபடி இருவழிச் சாலையாகவே காட்சியளிக்கிறது.குறுகிய சாலையில் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால், பேருந்துகள் அனைத்தும் நகருக்குள் வராமல், புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. கடைகளுக்கு வருபவர்கள், சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் சிக்கி தவிக்கும் நிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் நெடுஞ்சாலை துறை, போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மீது பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.மேலும் தாமதிக்காமல், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வேறு இடம் ஒதுக்கி, உடனடியாக ஜி.என்.டி., சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.