சாலையோர ஆக்கிரமிப்பு உணவகங்களால் சிப்காட் முகப்பில் போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் முகப்பில், மேம்பாலத்தின் கீழ் உள்ள ஆக்கிரமிப்பு உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. சிப்காட் முகப்பில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ், வாகனங்கள் கடந்து செல்லும் சாலையோரம் ஏராளமான ஆக்கிரமிப்பு உணவகங்கள் இயங்கி வருகின்றன. உணவகங்களுக்கு வரும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், தொழிலாளர்கள், தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. போக்குவரத்து பாதிப்புக்கு காரணமாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக அகற்ற வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.