கலையரங்கில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, இ.எஸ்.டி. கலையரங்கம் அமைந்துள்ளது. இந்த கலையரங்க வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தையும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, இரவு நேரத்தில் கலையரங்க வளாகத்தில், தள்ளுவண்டிகள் ஆக்கிரமித்துள்ளன.தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை வாங்குவதற்காக, ஏராளமான 'குடி'மகன்கள் இங்கு வருகின்றனர். இரவு நேரத்தில் சந்தை வளாகத்தில் குவியும் இவர்களால், அந்த வளாகத்தில் குப்பை குவிகிறது. கலையரங்கை ஒட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கலையரங்க வளாகத்தில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்படுத்தவும், கலையரங்க வளாகத்திற்கு வாயிற்கதவு அமைத்து பாதுகாக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.