ஆட்டோவில் குட்கா கடத்திய பெண் உட்பட இருவர் கைது
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட பயணியர் ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 77 கிலோ எடை குட்கா மூட்டைகள் சிக்கின. ஆட்டோவுடன் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்திய, சென்னை திருமுல்லைவாயில் தாமோதரன், 53, புரசைவாக்கம் மாலதி, 43, ஆகிய இருவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.l ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகரம் வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிக்கு குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை திருத்தணி போலீசார் திருத்தணி—அரக்கோணம் மாநில சாலை, வள்ளியம்மாபுரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பதிவெண் இல்லாத, ஒரே இரு சக்கர வாகனத்தை போலீசார் கண்காணித்து நிறுத்தினர். அப்போது வாகனத்தில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, 30 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 24 ஆயிரம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், அரக்கோணம் பழனிப்பேட்டை சதீஷ்,23, இலுப்பை தண்டலம் சுமன், 23, உப்பரபாளையம் ஜெய்கிஷோர், 21 என தெரியவந்தது. மூவர் மீது திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.