மின்சார ரயில் மோதி இரு பசுக்கள் பலி இரும்பு தடுப்பு பலன் அளிக்கவில்லை தெற்கு ரயில்வே கவனம் செலுத்துமா?
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே மின்சார ரயில் மோதி இரண்டு பசுக்கள் உயிரிழந்தன. தண்டவாளத்தை கால்நடைகள் கடக்காமல் இருக்க அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் பலன் அளிக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருத்தணியில் இருந்து சென்னை மூர்மார்க்கெட் நோக்கி, நேற்று மதியம் 2:40 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. மாலை 3:05 மணியளவில், திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த அரிசந்திராபுரம் ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்திற்கு இடையே வளர்ந்திருந்த புல்லை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசுக்கள் மீது ரயில் மோதியது. இதில், இரண்டு பசுக்கள் உயிரிழந்தன. இதனால், 20 நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டு, மாலை 3:25 மணிக்கு புறப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கால்நடைகள் ரயிலில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. இதனால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தாமதமாகிறது. மேலும், 'வந்தே பாரத், சதாப்தி' போன்ற அதிவிரைவு ரயில்கள், இவ்வழித்தடத்தில் இயக்கப்படுவதால், தண்டவாளத்திற்குள் கால்நடைகள் நுழைவதை தடுக்க, கடந்தாண்டு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனாலும், கால்நடைகள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இது, ரயில் பயணியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.