உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.1.40 கோடி நிலமோசடி வழக்கு உடந்தையாக இருந்த இருவர் கைது

ரூ.1.40 கோடி நிலமோசடி வழக்கு உடந்தையாக இருந்த இருவர் கைது

ஆவடி:போரூர், கொளப்பாக்கம், வி.ஜி.என்., பத்மா அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமசாமி, 42. இவர், கடந்த 2023 செப்., 27ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:நான் கே.ஆர்.எஸ்., 'கன்ஸ்ட்ரக் ஷன் அன்ட் ரியல் எஸ்டேட்' என்ற பெயரில் தொழில் செய்து வருகிறேன். எனக்கு கொளப்பாக்கத்தைச் சேர்ந்த மேகநாதன் மற்றும் கொளப்பாக்கம் வார்டு உறுப்பினர் துரை சேபாலா மற்றும் வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.கொளப்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் 2,972 சதுர அடி நிலம் விலைக்கு வருவதாகவும், நிலத்தின் உரிமையாளர் எனக்கூறி ஹேமா சேஷன் என்பவரையும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.மேற்படி இடத்திற்கு, 1.40 கோடி ரூபாய் விலை பேசி, கடந்த 2022ல் ஹேமாசேஷனிடம் முதல் தவணையாக 30 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தேன். அசல் ஆவணம் குறித்து கேட்டபோது, ஆவணம் தொலைந்து விட்டதாகவும், அயனாவரம் போலீசில் சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் கூறினர்.அசல் பத்திரம் இல்லாததால், மேற்படி நிலம் வேண்டாம் எனக்கூறி பணத்தை திருப்பி கேட்டேன். இதனால், பிரபாகரன், ஹேமாசேஷனின் மகள் சந்திரா பெயரில், மேற்படி நிலத்தின் தாய் பத்திரம் கொண்டு கிரையம் செய்து கொடுப்பதாக கூறினார்.இதையடுத்து, சந்திரா அந்த நிலத்தை எனக்கு பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தார். அதற்காக 1.10 கோடி ரூபாய் ஹேமாசேஷனிடம் கொடுத்தேன்.இந்த நிலையில், நிலத்தின் மீது பிரச்னை இருப்பதாக அறிந்து பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர். எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அந்த நிலத்தின் மதிப்பு, 1.40 கோடி ரூபாய்.இது குறித்து இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில், தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பொது அதிகாரம் வழங்கிய சந்திரா என்பவர் போலியான நபர் என்பதும், ஹேமா சேஷனுக்கு மகன் மட்டும் தான் உள்ளார் என தெரிந்தது. மேலும், வழக்கறிஞர் பிரபாகரன், துரை சேபாலா, மேகநாதன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, ஜெயகுமார் என்பவர் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில், மேகநாதன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆள் மாறாட்டத்திற்கு உடந்தையாக இருந்த வியாசர்பாடி, பொன்னம்பலம் தெருவைச் சேர்ந்த மணவாளன், 49, மற்றும் விஸ்வநாதன், 49, ஆகியோரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ