மேலும் செய்திகள்
ஆதனுார் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
11-Apr-2025
எண்ணுார்:எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த ரவி மகன் சாய்மோனிஷ், 11; தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்.நேற்று முன்தினம் மதியம் முதல் சிறுவனை காணவில்லை. நண்பர்களுடன், தாழங்குப்பம் கடற்கரைக்கு சாய்மோனிஷ் சென்றதாக, பெற்றோருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இது பற்றி அவர்கள் விசாரிக்கவே, கடலில் குளித்த சாய்மோனிஷ், அலையில் சிக்கி மாயமானதும், பயத்தில் இருந்த நண்பர்கள் இதை வெளியில் சொல்லாமல் இருந்ததும் தெரிந்தது.இதற்கிடையே, நேற்று மாலை அதே பகுதியில், சாய்மோனிஷ் உடல் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை மீட்ட எண்ணுார் போலீசார், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மற்றொரு சம்பவம்
படப்பை அருகே, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆரோக்கியசெல்வராஜ் மகன் சோஜான், 11. கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். ஆதனுார் ஏரியில் மீன் பிடிக்க, நண்பர்களுடன் சோஜான் நேற்று சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக சோஜான், நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து வந்த படப்பை தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, நீரில் மூழ்கிய சோஜான் உடலை மீட்டனர். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் சாய்மோனிஷ், கடலில் மூழ்கியது குறித்து, எண்ணுார் எஸ்.ஐ., திருவேங்கடம், நேற்று மதியம், தாழங்குப்பம் கடற்கரையில் விசாரணை நடத்தினார். அப்போது, அதே பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த, எண்ணுார், காமராஜர் நகரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் ஹரிஹரன், 12, அலையில் சிக்கி தத்தளித்தார்.இதை பார்த்த எஸ்.ஐ., திருவேங்கடம், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார். இவரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
11-Apr-2025