மேலும் செய்திகள்
பொன்னேரி நகராட்சி கழிவுகளால் பாழாகும் ஆரணி ஆறு
26-Oct-2024
பொன்னேரி:பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் இறுதிகட்ட பணியாக, சுத்திகரிப்பு நிலையத்திற்கு பைப் லைன் கொண்டு செல்வதற்கு ஆரணி ஆற்றின் அடிப்பகுதியில் 'ஹரிசாண்டல் புல்லிங்' முறையில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், கடந்த 2019ல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இரண்டு கட்டங்களாக துவங்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.முதல்கட்டமாக, 54.78 கோடி ரூபாயில், நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 'மேன்ஹோல்கள்'
தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், 'மேன்ஹோல்கள்' உள்ளிட்டவை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீரை சேகரிக்க வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில், கீழ்நிலை தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு, அங்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.தொட்டிகளில் சேகரமாகும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக, நகராட்சிக்கு உட்பட்ட பெரியவணம் பகுதியில், ஆரணி ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு, நாளொன்றிற்கு, 65 லட்சம் லிட்டர் கழிவுநீரை, பல்வேறு நிலைகளில் சுத்திகரிப்பு செய்து, நன்னீராக மாற்றப்பட உள்ளது. சிறிய பாலம்
பிரத்யேகமான தொட்டிகள், பில்டர்களும், அவற்றில் இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இறுதி கட்டமாக சேகரிப்பு தொட்டிகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்ல பைப் லைன் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதில், கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளுக்கும், சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையே ஆரணி ஆறு பயணிக்கிறது. ஆற்றில் சிறிய பாலம் அமைத்து, அதன் மீது பைப்லைன் பதிக்க முதலில் திட்டமிடப்பட்டது.அதில் பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டதால், அத்திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, திருவாயற்பாடி - சின்னகாவணம் இடையே, 12 மீட்டர் ஆழத்தில் 'ஹரிசாண்டல் புல்லிங்' முறையில் ஆற்றின் குறுக்கே, 250 மீட்டர் நீளத்திற்கு பைப்லைன் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரயில்
இதற்காக, சின்னகாவணம் பகுதியில் இருந்து பிரத்யேக இயந்திரத்தின் உதவியுடன், 12 மீ., ஆழத்தில் துளையிடும் பணி நடைபெறுகிறது. முதலில் 'பைலட்' பைப் என்ற சிறிய அளவிலான இரும்பு உருளை ஆற்றின் அடியில் துளையிட்டு கொண்டு செல்லப்படுகிறது.அது திருவாயற்பாடி கரையை அடைந்ததும், அதே வழித்தடத்தில் ராட்சத இரும்பு உருளைகள் ஒவ்வொன்றாக 'புல்லிங்' முறையில் மறுகரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.இது மெட்ரோ ரயில், மண்ணுக்கு அடியில் கேபிள் பதிப்பது போன்ற தொழில்நுட்பம் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.சவாலான இப்பணிகள் நிறைவு பெற்றால், பாதாள சாக்கடை திட்டத்திற்கான பெரும்பாலான பணிகள் முடியும் எனவும், விரைவில் திட்டம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26-Oct-2024