மாந்தீஸ்வரர் பூஜையில் கட்டுக்கடங்காத கூட்டம்: ஆன்லைன் டிக்கெட் வசதி கோரும் பக்தர்கள்
திருவாலங்காடு:மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கான டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில், காலை 6-:00 -- மதியம் 12:00 மணி வரை, மூன்று குழுக்களாக 160 -- 200 பக்தர்கள் பூஜையில் பங்கேற்று வருகின்றனர். இதற்கு கட்டணமாக, 1,600 ரூபாயை கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து பூஜையில் பங்கேற்கின்றனர். சனிக்கிழமை காலை கோவில் அலுவலகத்தில் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை பெற குறைந்தது, 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் வாரந்தோறும் வரும் நிலையில், நீண்ட வரிசையை கண்டு பலரும் பூஜையில் பங்கேற்காமல் திரும்பி செல்வதாக கூறுகின்றனர். மேலும், அலைச்சல் ஏற்படுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர். எனவே, மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கான டிக்கெட்டை, மீண்டும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.