உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுப்பிக்கப்பட்ட நுாலகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

புதுப்பிக்கப்பட்ட நுாலகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

கடம்பத்துார் : திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கடந்த 2006 - 07ம் ஆண்டு முதல் 2010 - 11ம் ஆண்டு வரை 526 ஊரக நுாலகங்கள் துவக்கப்பட்டன.கிராமப்பகுதி இளைஞர்கள் தங்களின் அறிவைப் பெருக்கும் வகையில் துவக்கப்பட்ட இந்த நுாலகங்கள் கடந்த 10 ஆண்டுகளில் முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.இதையடுத்து தற்போது தமிழக அரசு அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட நுாலகங்களை தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 5.26 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுகழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. மேலும், அலமாரி, மேசை போன்ற அடிப்படை தேவைகளுக்காக ஒவ்வொரு நுாலகத்திற்கும் 25,000 ரூபாய், மற்றும் 50,000 ரூபாய் மதிப்பிலான புதிய புத்தகங்கள் வழங்கப்படுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் தரமான செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களின் சந்தாக்களை பெறுவதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆனால் மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட ஊகர நுாலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.இவ்வாறு பூட்டிக்கிடக்கும் நுாலகங்கள் சில ஊராட்சியில் ரேஷன் கடையாகவும், அங்கன்வாடி மையமாகவும் செயல்பட்டு வருவது நுாலக வாசகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஊரக நுாலகங்களை ஆய்வு செய்து நுாலகர் பணியிடங்களை பூர்த்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுாலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் காலியாக உள்ள நுாலகர் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்து நுாலகர் நிரப்பக்கோரி சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து நுாலகங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ