தச்சூர் ஆறுவழிச் சாலையில் விவசாய பணிக்கு இணைப்பு சாலை உருவாக்க வலியுறுத்தல்
திருத்தணி:திருத்தணியில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நேற்று, வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், விவசாயிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்து தங்களது பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மினி டிராக்டர்களை அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர்.எனவே மானிய விலையில் மினி டிராக்டர் வழங்கும் நடைமுறையை ஆன்லைன் வாயிலாக செயல்படுத்த வேண்டும்.வி.கே.என்.கண்டிகையில் இருந்து, எஸ்.அக்ரகாரம் கிராமத்திற்கு செல்லும் வரவு கால்வாயில் வெள்ளம் செல்லும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுவதால் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.சித்தூர்- - தச்சூர் ஆறுவழிச் சாலை திட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட சானாகுப்பம் முதல், புண்ணியம் வரை துரித வேகத்தில் நடந்து வருகிறது.மேற்கண்ட பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள இணைப்பு சாலை உருவாக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.லட்சுமாபுரம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்துள்ளதால், மழைநீர் விவசாய நிலத்தில் பாய்கிறதால், பயிர் சேதம் அடைகின்றன. ஆகையால், நீர்வரத்து கால்வாய் அளவீடு செய்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.வருவாய் கோட்டாட்சியர் தீபா நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.