புலிக்குளம் - சிருளப்பாக்கம் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
பொன்னேரி: சேதமடைந்த புலிக்குளம் - சிருளப்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். பொன்னேரி அடுத்த புலிக்குளம் கிராமத்தில் இருந்து பி.என்.கண்டிகை, கே.என்.கண்டிகை, வெள்ளக்குளம், சிருளப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளது. பல்வேறு தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்லும் கிராம மக்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். இந்த சாலையில் உள்ள ரயில்வே சுரங்கபாதையும் பராமரிப்பு இன்றி உள்ளது. பாதை முழுதும் பாசிபடிந்து, சகதியாக மாறி இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் செல்லும் போது, தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில், சகதியில் சிக்கி கீழே விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். சேதமான சாலை, சுரங்கபாதையில் சகதி ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் சிரத்திற்கு ஆளாகி வருவதால், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.