நோய் தடுப்பு பணியில் கால்நடை துறை அலட்சியம் பருவமழையால் தொற்று அதிகரிப்பு
திருவாலங்காடு: பருவமழை சீசனில், கால்நடைகள் பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், கால்நடைத்துறையினர், கிராமந்தோறும் சிறப்பு முகாம் நடத்தாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், பால் உற்பத்தி குறைவதுடன் கால்நடை வளர்ப்பும் சவாலாகி உள்ள தாக புலம்புகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய இடங்களில் கால்நடை துறையின் உதவி இயக்குநர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில், ஐந்து கால்நடை மருத்துவ மனைகள், 88 கால்நடை மருந்தகங்கள், 27 கிளை நிலையங்கள் வாயிலாக, ஆடு, மாடு, கோழி என, 9 லட்சத்து 46 ஆயிரத்து 943 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு பருவ மழை காலத்தில் பரவும் நோய்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக பால் உற்பத்தி குறைவதுடன், ஒவ்வொரு சீசனிலும், 100க்கும் மேற் பட்ட மாடுகள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. கால்நடைகள் உயிர் இழப்பதால், பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்; குறிப்பாக மாடு களுக்கு மடிவீக்க நோய் ஏற்படுகிறது. தற்போது பரவலாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, திருத்தணி பள்ளிப்பட்டு பூண்டி மீஞ்சூர் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு, இத்தகைய நோய்த்தாக்குதல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருவாலங்காடை சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயி வெங்கடேசன் கூறியதாவது: கால்நடைகளுக்கு உண்ணிக்காய்ச்சல், மடிவீக்க நோய் மற்றும் அம்மை நோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பரவும் தன்மையுள்ள நோய்களால், ஒரே நேரத்தில் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான மாடுகளை பாதிக்கின்றன. இது குறித்து அருகிலுள்ள கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்களுக்கு தகவல் கொடுத்தாலும், சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு பணிகளில் அலட்சியமாக செயல் படுகின்றனர். தனியார் மருத்துவரை கொண்டு சிகிச்சை அளித்தால் ஒரு மாட்டுக்கு சிகிச்சையளிக்க, 2,000 ரூபாய் வரை செலவாகிறது. ஒவ்வொரு சீசனிலும், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கால்நடைத்துறையால் வழங்கப்படும்; துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்தகைய முகாம்கள் தற்போது நடைபெறுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.