உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மங்களம் ஆரணி ஆற்றில் தரைப்பாலம் கட்ட கலெக்டருக்கு கிராமவாசிகள் கோரிக்கை

மங்களம் ஆரணி ஆற்றில் தரைப்பாலம் கட்ட கலெக்டருக்கு கிராமவாசிகள் கோரிக்கை

திருவள்ளூர்:ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, மங்களம் கிராமவாசிகள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மங்களம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.கிராமத்தில் உள்ள விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் காய்கறி, கீரை வகைகளை வேளாண் பொருட்களை அருகில் உள்ள ஆரணி ஆற்றைக் கடந்து தான், பெரியபாளையம், ஆரணி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பணிக்கு செல்வோரும் ஆரணி ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.இதற்காக, கிராமவாசிகள் ஆற்றின் குறுக்கே மண்ணைக் கொட்டி தற்காலிக சாலை அமைத்துள்ளனர். மழைக் காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக, தற்காலிக பாதை நீரில் அடித்துச் செல்லப்படும். குறிப்பாக, அக்., முதல் ஜன., வரை நான்கு மாதங்கள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மங்களம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தோர், ஆரணி ஆற்றைக் கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.அந்த சமயங்களில், மங்களம் கிராமத்தைச் சேர்ந்தோர் தாங்கள் விளைவித்த காய்கறி, கீரைகளை விவசாயிகளும், மாணவ - மாணவியர் மற்றும் பணிக்கு செல்வோரும், 15 கி.மீ., துாரம் பெரியபாளையம் வழியாக, ஆரணிக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில், சில மாதங்களுக்கு மங்களம் கிராமத்திற்கு வந்த கலெக்டர் பிரதாப்பிடம் கிராமவாசிகள் ஆரணி ஆற்றில் தரைப்பலம் கட்டித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து அதிகாரிகளிடம் ஆரணி ஆற்றில் தரைப்பாலம் கட்டித் தருமாறு உத்தரவிட்டார். இருப்பினும், அதற்கான பணியினை அதிகாரிகள் இன்னும் துவங்கவில்லை என, கிராவாசிகள் கவலை தெரிவித்தனர்.எனவே, வரும் மழை காலத்திற்குள் மங்களம் ஆரணி ஆற்றில் தரைப்பாலம் கட்டித் தருமாறு, கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை