உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று விநாயகர் சதுர்த்தி விழா திருவள்ளூரில் ஏற்பாடு தீவிரம்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா திருவள்ளூரில் ஏற்பாடு தீவிரம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு தேவையான பழங்கள், பூக்கள் மற்றும் பூஜை பொருள் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், 850க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை வராத வகையில், கொண்டாட வேண்டும் என, விழா குழுவினருக்கு போலீசார் அறிவுறுத்திஉள்ளனர். மாவட்டத்தில் ஏரி, குளம் என மொத்தம், 19 இடங்களில், விநாயகர் சிலைகளை கரைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் பூஜைக்கு தேவையான, விநாயகர் குடை, எருக்கம் பூ மாலை, அருகம்புல், மா இலை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, விளாம்பழம், கம்புகதிர், மக்காசோளம், கலாக்காய், மாதுளம், கொய்யா, நாவல், திராட்சை மற்றும் செங்கரும்பு போன்ற, அனைத்துப் பொருட்களும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு பழங்கள், பூ மற்றும் பூஜை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும், விநாயகர் பூஜைக்கு தேவையான பழம், குடை, எருக்கம்பூ மாலை உள்ளிட்ட ஒரு செட் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும், பக்தர்கள் ஆர்வமாக பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர். பூக்கள் விலை உயர்வு திருத்தணி நகரம் மற்றும் கிராம மக்கள் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவில் பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் குவிந்தனர். பூஜை பொருட்களில் முக்கியமான பூக்கள் விலை அதிகரித்துள்ளன. கடந்த வாரம் விற்ற பூக்கள் விலை நேற்று நான்கு மடங்காக விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. சாமந்தி பூ ஒரு கிலோ, 400 ரூபாய்; மல்லி, 1000 ரூபாய், முல்லை, 900 ரூபாய், ஜாதி மல்லி, 800 ரூபாய், கனகாம்பரம், 1,100 ரூபாய், ரோஜா, 300 ரூபாய் என நேற்று பூ மார்க்கெட்டில் விற்பனை செய்தனர். கிடுக்கிப்பிடி விநாயகர் சிலை வைத்து வழிபடும் குழுவினர், காவல், தீயணைப்பு உள்ளிட்ட ஐந்து துறையினரிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என அரசு கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 6 -10 வரையிலான விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யும் குழுவினர், காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. அதன்படி, காவல்துறை அனுமதி மட்டுமின்றி, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு, உள்ளாட்சி அமைப்புகளிடமும் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ