உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஏரிகளில் கழிவுநீரை விடும் உள்ளாட்சிகளுக்கு... எச்சரிக்கை போலீசில் புகார் அளிக்க நீர்வளத்துறை முடிவு

 ஏரிகளில் கழிவுநீரை விடும் உள்ளாட்சிகளுக்கு... எச்சரிக்கை போலீசில் புகார் அளிக்க நீர்வளத்துறை முடிவு

திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில், உள்ளாட்சி அமைப்புக்களே சுத்திகரிக்காமல் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்கிறது. பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தும் கண்டு கொள்ளாததால், போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில் நீர்வளத் துறையினர், 79 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை பராமரித்து வருகின்றனர். நந்தியாறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றையும் பராமரித்து வருகின்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், நந்தியாறு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டி உள்ளனர். இவற்றில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. மேலும், நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகள், திருத்தணி நகராட்சி நிர்வாகம் உட்பட, 20க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆழ்துளை கிணறுகள் மற்றும் தரைமட்ட கிணறுகள் அமைத்துள்ளன. அதிலிருந்து, மின் மோட்டார் மற்றும் பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் இருந்து தண்ணீர், திருவள்ளூர் அடுத்த பூண்டி ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏரிகள் மற்றும் ஆறுகளில், சில உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீரை விடுகின்றன. சில இடங்களில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் குப்பை கொட்டி தண்ணீரை மாசுப்படுத்துகின்றன. கழிவுநீர், குப்பையை நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, தண்ணீர் மாசுப்படுவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, திருத்தணியை சேர்ந்த, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் திருத்தணி நகராட்சி நிர்வாகம், கழிவுநீர் சுத்தரிகரிப்பு நிலையம் அமைத்து, தண்ணீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என, பலமுறை தெரிவித்து உள்ளோம். கழிவுநீரை நேரடியாக விடக்கூடாது என, எச்சரிக்கும் வகையில், நோட்டீஸ் அளித்துள்ளோம். ஆனாலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் நீர்நிலையில் விடுவது தொடர்கிறது. எனவே, கழிவுநீரை ஆறு மற்றும் ஏரிகளில் விட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தடையின்றி அனைத்து

ஏரிகளிலும் கழிவுநீர்

திருத்தணி நகராட்சியின் கழிவு நீர் நந்தியாறு மற்றும் திருத்தணி ஏரியில் நேரடியாக கலக்கிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளின் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி கழிவுநீர் பாண்டரவேடு ஏரியில் கலக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியின் கழிவுநீர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஏரி மற்றும் நந்தியாற்றில் கலக்கிறது. அம்மையார்குப்பம் ஊராட்சியின் கழிவுநீர் ராஜநகரம் ஏரியில் கலக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ