பூண்டி நீர்த்தேக்கத்தில் குறைந்து வரும் தண்ணீர்
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக, சமீபத்தில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக, பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வாயிலாக, சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டது. சமீபத்தில் கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டது.ஆனால், சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு பூண்டி இணைப்பு கால்வாய் வாயிலாக தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கொள்ளளவு 1.9 டி.எம்.சி., நீர்மட்டம் 30.67 அடி. நீர்வரத்து இல்லாத நிலையில், 350 கன அடி நீர் இணைப்பு கால்வாய் வாயிலாக, சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டிருப்பதால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.