கிருஷ்ணசமுத்திரம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றி...அட்டூழியம்!:மீன்கள் பிடிக்க அத்துமீறுவதால் விவசாயிகள் கவலை
திருத்தணி:திருத்தணி அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில், சமூக விரோதிகள் சிலர் மீன்பிடிப்பதற்காக, இரவு நேரத்தில் மின்மோட்டார்கள் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி அட்டூழியம் செய்து வருகின்றனர். தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டிய நீர்வளத் துறையினரும் அலட்சியமாக உள்ளதால், ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஏரி, 390 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. திருத்தணி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஏரி இதுதான். இந்த ஏரியை நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.இந்த ஏரிப்பாசனத்தை நம்பி, கிருஷ்ணசமுத்திரம் கிராமம், காலனி மற்றும் எல்லம்பள்ளி விவசாயிகள் பயிரிடுகின்றனர்.கிருஷ்ணசமுத்திரத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது. இதனால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னை தீர்வதுடன், விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும்.வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால், கிருஷ்ணசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.இந்நிலையில், சில சமூக விரோதிகள், சில நாட்களாக, இரவு நேரத்தில் மட்டும் ஏரியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது, ஏரியில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு இந்த அட்டூழியத்தை செய்வதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகின்றனர்.ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சில நேரங்களில், கிராம வீதிகள் வழியாக செல்வதை அறிந்த திருத்தணி ஒன்றிய அதிகாரிகள், பகலில் நேரில் சென்று பார்வையிட்டனர்.அப்போது, இரவு நேரத்தில் தண்ணீர் வெளியேற்றுவது உண்மை என்று தெரிந்தும், ஏரியை பராமரிக்கும் நீர்வளத் துறையினர்தான், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, கண்டும், காணாமல் சென்று விட்டனர்.ஆனால், சமூக விரோதிகள் தற்போதும், இரவு நேரத்தில் மின்மோட்டார்கள் வாயிலாக, தண்ணீர் வெளியேற்றி வருவதாக, அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, நீர்வளத் துறையினரும், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியில் இருந்து மின்மோட்டார் வாயிலாக தண்ணீரை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி, சமூக விரோதிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புகார் வரவில்லை ஆய்வு செய்வோம்
இதுகுறித்து, திருத்தணி நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டில், கிருஷ்ணசமுத்திரம் ஏரியில் மீன்கள் பிடிக்க, மீன்வளத் துறை மாவட்ட அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து கொடுத்தால் ஏலம் விடுவோம். அந்த வகையில்தான் கடந்தாண்டும் மீன் பிடிக்க ஏலம் விட்டுள்ளோம்.தற்போது ஏரி நிரம்பியுள்ளதால் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் வெளியேற்றுவது குறித்து எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும், இன்றே நேரில் ஆய்வு செய்வோம். இரவு காவலர் நியமித்து ஏரி கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.