வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜல்ஜீவன் என்ன ஆச்சு?
திருத்தணி:திருத்தணி நகராட்சியின் வருவாயை பெருக்கவும், குடிநீர் இணைப்பை முறைப்படுத்தவும், தெருக் குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்படும் குடிநீர் நிறுத்தப்படுவதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன் வைப்பு தொகை செலுத்தினால் மட்டுமே, குழாய் வழியாக வீடுகள், வணிக வளாகங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியின் 21 வார்டுகளில், 13,710 வீடுகள், 1,230 வணிக வளாகங்கள் உள்ளன. இதில், 1,590 வீட்டு உரிமையாளர்கள் மட்டும், முன்வைப்பு தொகை செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். மீதமுள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, நகராட்சி நிர்வாகம் தெரு குழாய்கள் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.தற்போது, நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலி மனை வரி, தொழில் வரி, தொழில் உரிமம், நகராட்சி கடைகளுக்கு குத்தகை என, ஆண்டுக்கு, 6.35 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இந்த நிதியின் வாயிலாக, நகராட்சி மக்களின் குடிநீர், கால்வாய், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, நிர்வாகம் செய்து வருகிறது. நகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.அதனால், பொதுமக்களுக்கான வசதிகளை செய்து, அதன் வாயிலாக வரி, கட்டணம் வசூலித்து வருவாயை பெருக்கு, நகராட்சி திட்டமிட்டு உள்ளது.அந்த வகையில், 110 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை, திருத்தணிக்கு கொண்டு வந்துள்ளது. 21 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் வழங்க, குழாய்கள் நிலத்தடியில் புதைத்து தயார் நிலையில் உள்ளது.குடிநீர் இணைப்பு பெறுவது குறித்து, அனைத்து தரப்பினரிமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகம், முன் வைப்பு தொகை செலுத்தாத வீடு, வணிக வளாகங்களுக்கு, குழாய் வழியாக செல்லும் குடிநீரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. முன் வைப்பு தொகை செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்ற பின், முறையாக குடிநீர் வழங்கப்படும் எனவும், நகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, திருத்தணி நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:நகராட்சியின் 21 வார்டுகளில், பெரும்பாலானோர் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு, வரும் பொங்கலுக்கு பின் தெருக் குழாய் வாயிலாக வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.ஆகையால், புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு, நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, முன் வைப்பு தொகை செலுத்தி, ரசீது பெற்று குடிநீர் பெறலாம்.ஏற்கனவே, குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், கூடுதல் தொகை செலுத்தினால், தொடர்ந்து குடிநீர் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு முன் வைப்பு தொகை, 7,000 ரூபாயும், குழாய் அமைக்கும் செலவு, 1,500 ரூபாயும் என, மொத்தம், 8,500 ரூபாய் செலுத்த வேண்டும். முன்னதாக வீட்டுக்கு சொத்து வரி செலுத்தியிருக்க வேண்டும்.ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், கூடுதலாக, 2,000 ரூபாய் வைப்புத் தொகை, குழாய் அமைக்க 1,500 என, 3,500 ரூபாய் செலுத்த வேண்டும்.இதே போல, வணிக வளாகங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெற, முன் வைப்புத் தொகை, 15,000 ரூபாயும், குழாய் அமைக்கும் செலவு, 1,500 ரூபாயும் என, மொத்தம், 16,500 ரூபாய் செலுத்தி, ரசீது பெற வேண்டும்.
ஜல்ஜீவன் என்ன ஆச்சு?