லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக பணி என்னாச்சு? 2 ஆண்டாகியும் முடியாததால் அதிருப்தி
கடம்பத்துார்:நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக பணி, இரண்டரை ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2023 ஜூலை 5ம் தேதி பாலாலயம் நடந்து சில மாதங்கள் மட்டும் பணிகள் நடந்தது. அதன்பின், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., அறங்காவலர் குழு தலைவரே காரணமென, பக்தர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவரும், தி.மு.க., கிளைச் செயலருமான மோகனசுந்தரம் என்பவர், 2025 ஜனவரி 10ம் தேதி ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், கோவில் வளாகத்தில் அஷ்ட லட்சுமி மண்டபத்தில் அறங்காவலர் அலுவலகம் கட்டும் பணியை மேற்கொண்டார். தகவலறிந்த ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், மறுநாள் கட்டடத்தை அகற்றிவிட்டு, எச்சரித்து அனுப்பினர். கடந்த மே மாதம் கொடி சீரமைப்பு பணிகளை, 230 கிராம் தங்கத்தில் மேள்கொள்ள இருந்தனர். அப்போது, கெமிக்கல் பயன்படுத்துவதாக ஸ்தபதிகள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கொடிமரத்தகடு சீரமைப்பு பணிகளை நிறுத்தினர். கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி அறங்காவலர் குழு தலைவர் மோகனசுந்தரம் கொடி மர தகடுகளை பிரித்தெடுத்தார். இதனால், கொடி மரம் சேதமடைந்தது. எனவே, கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து, அனுமதியில்லாமல் அறங்காவலர் அறை, கொடிமரத் தகடுகள் பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளார். அன்னதான திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அறங்காவலர் குழு தலைவர் குறித்து அரசுக்கு புகார் அளித்து, அவரை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.