மினி பஸ் இயக்குவது எப்போது? திருநின்றவூர் மக்கள் எதிர்பார்ப்பு
திருவள்ளூர்:திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உள்பகுதியில் மினி பேருந்துகள் இயக்க பகுதிவாசிகள் எதிர்பார்த்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக, கடந்தாண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருநின்றவூரைச் சுற்றி பாக்கம், வேப்பம்பட்டு, நெமிலிச்சேரி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.இப்பகுதிவாசிகள் சென்னை மற்றும் வெளியூருக்கு செல்ல, திருநின்றவூர் வரவேண்டும். மேலும், '108' திவ்யதேசங்களில் ஒன்றான பக்தவத்சல பெருமாள் கோவில், பூசலார் நாயன்மார் மனதில் கட்டிய சிவன் கோவில், ஏரி காத்த ராமர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. திருநின்றவூரில் உள்ள கோவில் மற்றும் வசந்தம் நகர், ராஜாங்குப்பம், என்னைப்பெற்ற தாயார் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு பொது போக்குவரத்து வசதி இல்லை. இதனால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, திருநின்றவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்றுவர, மினி பேருந்துகள் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.