சாலை அமைப்பது எப்போது? நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
திருத்தணி:குண்டலுாரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.திருத்தணி நகராட்சி குண்டலுார் விநாயகர் கோவில் பின்புறத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள் செல்வதற்கு, 20 அடி அகலத்தில் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம் அந்த பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை.இதனால், அந்த பாதையில் செடிகள் வளர்ந்துள்ளன. தற்போது, அப்பகுதிவாசிகள் தனிநபர் வீட்டுமனை வழியாக சென்று வருகின்றனர். மேலும், பாதை முழுதும் செடிகள் வளர்ந்துள்ளதால், பகல் மற்றும் இரவு நேரத்தில் அடிக்கடி பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் குடியிருப்புகளில் புகுந்து விடுகின்றன.இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பல மாதங்களாக கோரிக்கை வைத்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, குண்டலுார் பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.