உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட நிழற்குடைகள் அமைப்பது எப்போது?

விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட நிழற்குடைகள் அமைப்பது எப்போது?

திருவள்ளூர்: பொன்னேரி - மீஞ்சூர் இடையிலான நெடுஞ்சாலையில், வெண்பாக்கம், தடபெரும்பாக்கம், புலிகுளம், இலவம்பேடு உள்ளிட்ட நிறுத்தங்களில் நிழற்குடை வசதி இல்லாததால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி - மீஞ்சூர் இடையிலான நெடுஞ்சாலையில், தடபெரும்பாக்கம், புலிகுளம், இலவம்பேடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. தினமும் 1,000க்கும் மேற்பட்ட பயணியர், மாணவ - மாணவியர், நிழற்குடை இல்லாததால் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பயணியர் கூறியதாவது: கடந்த 2017ல், பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இருந்த பயணியர் நிழற்குடைகள், சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்டன. தற்போது, பணிகள் முடிந்து எட்டு ஆண்டுகளை கடந்த நிலையில், இதுவரை நிழற்குடைகள் அமைக்கவில்லை. இதனால் மழையிலும், வெயிலிலும் நின்று தான் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற் குடை அமைக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி