உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி - வேளச்சேரி வழித்தடத்தில் மீண்டும் மின் ரயில் சேவை தொடருமா?

கும்மிடி - வேளச்சேரி வழித்தடத்தில் மீண்டும் மின் ரயில் சேவை தொடருமா?

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி இடையே இயக்கப்பட்ட புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில், தினமும், 80க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை நடைபெறுகிறது. இவற்றின் வாயிலாக, தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி மார்க்கத்தில், கடந்த, 2023வரை புறநகர் ரயில் சேவை இருந்தது. தினமும் காலை நேரத்தில், மூன்று ரயில் சேவைகள் இருந்ததால், பயணியர் சென்னை பார்க்டவுன், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், மயிலாப்பூர், தரமணி, வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு எளிதாக பயணித்து வந்தனர். குறிப்பாக அரசு அலுவலர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், கடந்த, 2023ல், பார்க்டவுன் ரயில் நிலையத்தில், தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி இடையே இயக்கப்பட்ட, புறநகர் ரயில் சேவை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் பயணியர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். சென்னை சென்ட்ரல் அல்லது கடற்கரை ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. 'பார்க்டவுன்' ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பராமரிப்பு பணிகள் முடிந்தன. ஆனால், கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி இடையேயான புறநகர் ரயில் சேவை மீண்டும் துவக்கபடாமல் இருப்பதால், பயணியர் சிரமப்படுகின்றனர். மேற்கண்ட மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை