செடி, கொடிகள் வளர்ந்த மின்கம்பம் மழைக்கு முன் மின்வாரியம் விழிக்குமா?
திருவாலங்காடு:திருவாலங்காடு மின்பகிர்மான அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. திருவாலங்காடு மின்பகிர்மான அலுவலகத்திற்கு உட்பட்டு, 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, தொழுதாவூர் பகுதியில் உள்ள மணவூர் சாலையில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் கொடிகள் வளர்ந்துள்ளன.அதேபோல, வீரராகவபுரம் கிராமத்தில், கூட்டுறவு வங்கி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் செடி, கொடிகள் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த செடி, கொடிகள் மின்கம்பத்தை முழுதும் ஆக்கிரமிக்க பல மாதங்களாகி இருக்கும். அப்படியிருந்தும், மின்வாரிய ஊழியர்கள், இதுவரை மின்கம்பங்களை பராமரிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் மின்பாதை பராமரிப்பு பணி எனக்கூறி, பகல் முழுக்க மின்தடை செய்யப்படுகிறது. இப்படி தரையில் இருந்து மின்கம்பிகள் வரை படர்ந்துள்ள கொடிகளால், மழைக்காலத்தில் காற்று பலமாக வீசினால், மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைக்கு முன் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.