கும்மிடி புறக்காவல் நிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், அங்குள்ள கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, 2016ம் ஆண்டு நவீன புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.இந்த புறக்காவல் நிலையத்தை போலீசார் முறையாக பராமரிக்காததால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி முழுதும் வைக்கப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராக்கள், புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி., திரை, ஒலி பெருக்கி என, அனைத்தும் வீணாகி வருகிறது.மேலும், கால்வாய் பணிக்காக புறக்காவல் நிலையத்தின் சுவர்களும், தரையும் பெயர்க்கப்பட்டன. முற்றிலும் சேதமடைந்த புறக்காவல் நிலையத்திற்கு புத்துயிர் அளித்து, பஜார் பகுதியில் நடக்கும் அசம்பாவிதங்களை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, இந்த ஆண்டு துவக்கத்தில் புறக்காவல் நிலையத்திற்கு புத்துயிர் அளிக்கும் பணிகளை வியாபாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டனர். தரை மற்றும் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டன. படிப்படியாக அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும் என, வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.புதுப்பிக்கப்பட்டு இரு மாதங்களான நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, உடனடியாக போலீசாரை நியமித்து, புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கும்மிடிப்பூண்டி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.