நெடியம் தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. கொசஸ்தலை ஆற்றுக்கு ஆந்திர மாநிலம், புல்லார் காப்புக்காடு மற்றும் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நெடியம் கிராமத்தில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதிவாசிகள், ஆந்திர மாநிலம், நகரிக்கு பயணிக்கின்றனர். குறிப்பாக, நெசவாளர்கள் தங்களுக்கு தொழில் நிமித்தமாக நகரி அடுத்த புதுப்பேட்டை, சத்திரவாடா, ஏகாம்பரகுப்பம், சிந்தலபட்டடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுடிதார் ரகம் துணியை நெய்வதற்கான பாவு மற்றும் ஊடை நுால்களை நெடியம் வழியாக கொண்டு வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடியம் தரைப்பாலம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. தொடர்ந்து சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இடிபாடுகளுடன் சிதைந்து கிடக்கும் தரைப்பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.