ஆட்டோக்களில் அடாவடியாக கட்டணம் வசூல் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் ஆட்டோ ஓட்டுநர்கள், அடாவடி கட்டணம் வசூலிப்பதால், பயணியர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது போன்ற ஆட்டோக்கள் மீது வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர். திருவள்ளூர் நகரில், ரயில் நிலையம் - தேரடிக்கு, 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரத்தில், நபர் ஒருவருக்கு 20 ரூபாய், இரவில் 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஜவஹர் நகர், பஜார் வீதி, ராஜாஜிபுரம், பூங்கா நகர், நேதாஜி சாலை போன்ற பகுதிகளில் இருந்து, தினமும் வேலை, கல்வி நிமித்தமாக, திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவர்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் இருசக்கர வாகனத்திலும், ஆட்டோக்களிலும் தான் சென்று வருகின்றனர். இவர்களிடம் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள், அடாவடியாக கட்டணம் வசூலிக்கின்றனர். ஜவஹர் நகரில் இருந்து ரயில் நிலையம் செல்ல, 300 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். வழக்கமாக, '120 - 150 ரூபாய் தருவோம்' என்போரை, 'போதை' ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டி, 300 ரூபாய் வரை வசூலித்து வருகின்றனர். ஆட்டோவில் ஏறும் போது, கட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்காமல், பயணியர் இறங்கும் இடத்தில், தகராறு செய்து, அடாவடியில் ஈடுபடுகின்றனர். எனவே, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.