உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாம்பரம் போல் திருவள்ளூர் புதிய முனையமாகுமா? எதிர்ப்பார்ப்பு!:தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்

தாம்பரம் போல் திருவள்ளூர் புதிய முனையமாகுமா? எதிர்ப்பார்ப்பு!:தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்

திருவள்ளூர்: சென்னை நகரின் மேற்கு நுழைவாயிலான திருவள்ளூரை புதிய முனையமாக மாற்ற வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினரும், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்டோரும் தென்னக ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், தாம்பரம் போல், திருவள்ளூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர் வழியாக மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை, நாகர்கோவில், போடி, பாலக்காடு உள்ளிட்ட வட மற்றும் தென் மாவட்டங்களுக்கும், ஏராளமான விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் மின்சார ரயில்களை, தினமும் ஒன்றரை லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், 10,000க்கும் மேற்பட்டோர் வியாபாரம் சம்பந்தமாக, டில்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.இவர்கள், வெளியூர் செல்ல சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. குடும்பத்துடன் பயணிப்போர், தங்கள் உடைமைகளுடன் முதியோர், குழந்தைகளை அழைத்துச் செல்ல சிரமப்படுகின்றனர்.மேலும், ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக, காலவிரயம், வீண் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது.எனவே, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக இயக்கப்படும் கோவை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தாம்பரத்தை போல் திருவள்ளூரையும் புதிய முனையமாக மாற்ற வேண்டும் என, தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மத்திய ரயில்வே துறை அமைச்சகம் மற்றும் தெற்கு ரயில்வே துறைக்கு அனுப்பியுள்ள மனு:சென்னை 'மெட்ரோபாலிட்டன் சிட்டி'யில் தற்போது, சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து மாநிலங்களுக்கும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அசுர வளர்ச்சி பெற்று வரும் சென்னையில் இருந்து, எதிர்காலத்தில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க இடவசதி போதுமானதாக இல்லை.சென்னை புறநகர்களான தாம்பரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. திருவள்ளூரைச் சுற்றிலும் ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, மப்பேடு உள்ளிட்ட பகுதிகள் தொழிற்பேட்டைகளாக உருவாகி வருகின்றன.இந்த தொழிற்சாலைகளுக்கு வட, தென் மாநிலம் மற்றும் தென்மேற்கு மாவட்டங்களுக்கு போதுமான ரயில் வசதி திருவள்ளூரில் இல்லை. இதற்காக, சென்னை சென்ட்ரல் அல்லது எழும்பூர் செல்ல வேண்டி உள்ளது. தற்போது, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆறு ரயில்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இதை எட்டாக எளிதாக மாற்றலாம். மேலும், திருவள்ளூர் - கடம்பத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையில், ரயில்கள் நிறுத்தவும் இடவசதி உள்ளது. திருவள்ளூரை புதிய முனையமாக மாற்றினால், எதிர்கால ரயில் சேவையை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். மேலும், திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஹவுரா, புதுடில்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ரயில் சேவை இயக்க இயலும்.இதை ரயில்வே துறையினர் பரிசீலனை செய்து, திருவள்ளூரை புதிய முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே கருத்தை வலியுறுத்தி, திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கு, ரயில் பயணியர் சங்கத்தினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

திருவள்ளூர் வளர்ச்சிக்கு உதவும்

இயற்கை பேரிடர், ரயில் பராமரிப்பு பணி போன்ற அவசர காலங்களில், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட ரயில்கள் திருவள்ளூரில் நிறுத்தப்படுகின்றன. சமீபத்தில், பேசின் பிரிட்ஜ் பகுதியில் நடந்த பராமரிப்பு பணி காரணமாக, போடி விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது. தற்போது, சபரிமலை செல்லும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் திருவள்ளூரில் நிறுத்தப்படுகிறது. விரைவு ரயில்கள் இரு நிமிடம் நின்று செல்வதற்கு வசதியாக விரைவு ரயில் பாதை வசதியும் இங்குள்ளது. எனவே, எதிர்கால வசதியை கருத்தில் கொண்டு, திருவள்ளூரை புதிய முனையமாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்.ஒய்.ஜெயபால்ராஜ்செயலர்,திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kanns
நவ 28, 2024 22:41

Initially like Tambaram, All NorthWest-West-SWest-South Bound Trains Must Stop in Avadi-Later Thiruvallur. All South Bound Via MsEgmore Trains Can Originate at Thiruvallur All North, NWest, NEast, West, SWest Trains Can Originate at Chengalpet 75% via MsEgmore ThiruvallurArknm 25% via KanchiArknm, Thiruvallur


Balakumar V
நவ 28, 2024 21:56

ஆவடி அல்லது அம்பத்தூர் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


சாண்டில்யன்
நவ 28, 2024 19:05

முதல் வேலையாக அந்த வழியே செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கேட்டு பெற வேண்டும் பின்னர் படிப்படியாக பயணிகளின் பயன்பாடு எப்படியென்று கண்டறிந்து அதற்கேற்றாற்போல தேவைப்படும் கோரிக்கைகளை வைக்கலாம்