மகளிர் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
திருவள்ளூர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன், பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் உலகநாதன், 48. இவரது மனைவி ஜெயந்தி, 42. தம்பதிக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், சில மாதங்களுக்கு முன் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மேல்நல்லாத்துாரில் மகன் மற்றும் ஒரு மகளுடன் ஜெயந்தி வசித்து வருகிறார். உலகநாதன் மற்றொரு மகளுடன், காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் ஒன்றை அளித்தார். பின், போலீசார் விசாரணையில் தம்பதி ஒத்துழைக்காததால், 'நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு காணுங்கள்' எனக் கூறி, கடந்த 21ம் தேதி, 'நீதிமன்றத்திற்கு உங்கள் மனுவை அனுப்பி உள்ளோம்' என, மகளிர் போலீசார் தெரிவித்தனர். நேற்று மகளிர் காவல் நிலையம் வந்த ஜெயந்தி, “என் பிரச்னைக்கு நீங்கள் தான் தீர்வு காண வேண்டும்,” எனக் கூறி, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தண்ணீரை ஊற்றி அவரை தடுத்த போலீசார், திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.